‘இன்னும் எத்தனை ஆண்டுக்கு தான் இதே டெம்ப்ளேட்’ – பொறுமையை சோதிக்கும் ராயர் பரம்பரை விமர்சனம்

0
2625
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் கிருஷ்ணா. சிறிய இடைவெளிக்கு பிறகு தற்போது கிருஷ்ணா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ராயர் பரம்பரை. இந்த படத்தில் சரண்யா, ஆனந்த் ராஜ், மனோபாலா, மொட்டை ராஜேந்திரன் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை ராம்நாத் பி எஸ் இயக்கி இருக்கிறார். இன்று வெளியாகி இருக்கும் ராயர் பரம்பரை படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

படத்தில் ஆனந்த் ராஜின் தங்கை ஒருவரை காதலிக்கிறார். இது ஆனந்த் ராஜிற்கு தெரியாமல் அவர் வீட்டை விட்டு ஓடிப்போய் திருமணம் செய்து கொள்கிறார். இதனால் மனம் வெறுத்துப் போன ஆனந்தராஜ் தன்னுடைய ஒரே மகளை பார்த்து பார்த்து வளர்க்கிறார். ஆனால், ஜாதகத்தில் ஆனந்த் ராஜின் மகளுக்கு காதல் திருமணம் தான் எடுக்கும் என்று சொன்னவுடன் அவர் பதறிப் போகிறார். அதுவும் அந்த திருமணம் ஆனந்த் ராஜ் சம்மதத்துடன் தான் நடக்கும் என்று கூறுகிறார்.

- Advertisement -

இன்னொரு பக்கம் கதாநாயகன் கிருஷ்ணா அவர்கள் ஆனந்த ராஜ் இருக்கும் ஊருக்கு புதிதாக வருகிறார். அவர் காதலிப்பவர்களை சகித்துக் கொள்ளாத சங்கத்தில் சேர்கிறார். பின் அவர் காதலர்களுக்கு எதிராக ரவுடிசத்தில் ஈடுபடுகிறார். இவர்களுக்கு மத்தியில் ஜோசியர் சொன்னது போல் நடந்ததா? கிருஷ்ணாவின் பின்னணி என்ன? ஆனந்தராஜ் தன்னுடைய மகளை பாதுகாத்து திருமணம் செய்து வைத்தாரா? என்பதே படத்தின் மீதி கதை.

கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பின் கதாநாயகனாக நடிகர் கிருஷ்ணா நடிப்பில் இந்த படம் வெளியாகியிருக்கிறது. இந்த படத்தில் இவர் காதல், சண்டை, கோவம் என அனைத்தும் கலந்த கமர்சியல் நாயகனாக பட்டையை கிளப்பி இருக்கிறார். ஆனால், இதை அனைத்தும் நல்ல கதை களத்தில் கொடுத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். இவரை அடுத்து அறிமுக நாயகி சரண்யா இந்த படத்தில் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

கதாபாத்திரம் இவரை சுற்றி தான் நகர்கிறது. ஆனாலும், இவர் தன்னுடைய நடிப்பில் இன்னும் கொஞ்சம் கவனத்தை செலுத்தி இருக்கலாம். இவர்களை அடுத்து கதாநாயகியின் அப்பாவாக ஆனந்தராஜ் வந்திருக்கிறார். கோபம், காமெடி கலந்த பஞ்ச் டயலாக், ஒரு அப்பாவாக தனக்கு கொடுத்த வேலையை தன்னுடைய அனுபவ நடிப்பு மூலம் சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார். படத்தில் பெரும்பாலும் இவருடைய பங்கு இருக்கிறது என்று சொல்லலாம்.

ஜோசியர் மனோபாலா, மொட்டை ராஜேந்திரன் இவர்களுடைய நடிப்பு நன்றாக இருந்தாலும் சில இடங்களில் கடுப்பை ஏற்றி இருக்கிறது. படத்தில் சென்டிமென்ட் குறையை கே ஆர் விஜயா தீர்த்து வைத்திருக்கிறார்.
இரட்டை அர்த்த வசனங்கள், குறைவான வயதில் அதிகம் பேசும் போன்ற பல விஷயங்கள் பார்வையாளர்கள் மத்தியில் சலிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. முதல் பாதி கொஞ்சம் சிரிக்க வைத்தாலும் கடுப்பேற்றியிருக்கிறது. இரண்டாம் பாதி சுமார் என்று தான் சொல்லணும்.

இயக்குனர் கதைக்களத்தில் நிறையவே கவனம் செலுத்தி இருக்கலாம். அதேபோல் இசையும் பெரிதாக சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இல்லை. காமெடியை வைத்து இந்த படத்தை இயக்குனர் எடுத்திருந்தாலும் கதைக்களத்தில் முக்கியத்துவத்தை கொடுத்திருக்கலாம். சொல்லப்போனால், திறமையான நடிகர்களை வைத்து இவர் வேலை வாங்குவதில் தவறவிட்டார் என்று தான் சொல்லணும்.

நிறை:

கிருஷ்ணாவின் நடிப்பு சிறப்பு

ஆனந்தராஜ் மொட்டை ராஜேந்திரன் காமெடிகள் ஓகே

ஒளிப்பதிவு சிறப்பு

மற்றபடி படத்தில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு ஒன்றுமே இல்லை

குறை:

இயக்குனர் கதைக்களத்தில் நிறைய மெனக்கட்டு இருக்க வேண்டும்

பின்னணி இசை சொதப்பிவிட்டது

கதாநாயகிக்கு நடிப்பு நிறையவே தேவை

மொத்தத்தில் ராயர் பரம்பரை- படுதோல்வி

Advertisement