இயக்குனர் சிறுத்தை சிவாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த கவினில இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் வேலன். இந்த படத்தில் பிக் பாஸ் முகேன், பிரபு, சூரி, மீனாட்சி கோவிந்தராஜன் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை கலைமகன் முபாரக் தயாரித்து இருக்கிறார். அனைவரும் எதிர்பார்த்திருந்த முகேன் படம் இன்று வெளியாகியுள்ளது. இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.
கதைக்களம்:
ஒரு ஊரில் நல்ல செல்வாக்கோடு வாழ்ந்து வருகிற குடும்பம் தான் பிரபுவின் குடும்பம். இவரது மனைவியாக ஸ்ரீரஞ்சனி நடித்திருக்கிறார். இவர்களின் மகனாக முகேன் நடித்திருக்கிறார். பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரியில் சேர்கிறார் முகேன். அங்கு வரும் கதாநாயகி மீனாட்சியை கண்டவுடன் முகேன் காதல் செய்கிறார். பின் இவர்களுடைய ஒருதலைக்காதல், இருதலை காதலாக மாறி இருவரும் ஒருத்தரை ஒருத்தர் காதல் செய்கிறார்கள். இது ஒரு பக்கம் இருக்க கேரளாவில் எம்எல்ஏவாக இருக்கும் ஹரீஷ் பெராடி, பிரபுவின் குடும்பத்திற்கு பரம்பரை வில்லனாக வருகிறார்.
இந்த நிலையில் இருவரின் காதலுக்கும் வேறுவிதமாக பிரச்சனை வருகிறது. மேலும், முகேனிற்கும் மற்றொரு நாயகியாக வரும் மரியாவிற்கும் திருமணம் என பிரபு வாக்கு கொடுத்திருக்கிறார். இறுதியாக முகேனிற்கும், மீனாட்சிக்கும் திருமணம் நடந்ததா? வில்லன் ஹரிஷ், பிரபு குடும்பத்தை பழி வாங்கினாரா? இதையெல்லாம் முகேன் எப்படி சமாளிக்கிறார்? என்பதே படத்தின் மீதிக்கதை. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு முகேன் நடித்த முதல் படம் இது தான். இந்த படத்தில் இவர் கதாநாயகனாக நடித்து இருந்தாலும் ஒரு சில இடங்களில் சற்று ஓவராக நடித்து இருப்பது போல் தெரிகிறது.
அது மட்டுமில்லாமல் ஓப்பனிங்கில் வரும் பாடல்கள் எல்லோரையும் ஆட்டம் போட வைத்திருக்கிறது. மேலும், காதல் பாடல்களில் இளைஞர்களின் மனதை திருடி சென்றிருக்கிறார் முகேன். ஆக்சன் காட்சிகளில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம் இயக்குனர். படத்தில் சின்ன சின்ன குறைகள் இருந்தாலும் மிக பிரமாதமான நடிப்பை கொடுத்திருக்கிறார் முகேன். இது முதல் படமாக இருந்தாலும் முகேன் அட்டகாசமாக நடித்திருக்கிறார். இதனால் பலரும் இவருக்கு வாழ்த்துக்களை சொல்லி இருக்கிறார்கள். படத்தில் கதாநாயகியாக வரும் மீனாட்சி அற்புதமான தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
இடைவெளி காட்சியில் சூரி என்ட்ரி கொடுத்து இருந்தாலும் மாஸாக நடித்திருக்கிறார். சூரி நுழைந்த பிறகு படம் விறுவிறுப்பாக அடுத்த கட்டத்திற்கு செல்கிறது. சூரியின் நகைச்சுவை படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது. மேலும், வழக்கம்போல் பாசமான, வீரமான, அமைதியான, தந்தையாக பிரபு நடித்து இருக்கிறார். அதேபோல் வில்லனாக ஹரீஷ் பெராடி கலக்கியிருக்கிறார். படத்தின் முதல் பாதியில் காமெடி பெரிய அளவில் கவனிக்கப்படவில்லை.
அதாவது சூரிக்கு முன், பின் என இரண்டாக பிரித்தால் இரண்டாம் பாதியில் சூரியின் காமெடி காட்சிகள் திரையரங்களில் கைதட்டல்களை வாங்கி உள்ளது. வழக்கமான காதல், குடும்பம், காதல் பழிவாங்கும் கதை என்றாலும் இரண்டாம் பாதியில் காமெடி காட்சிகள் பல இடங்களில் வந்ததற்கு இயக்குனருக்கு பாராட்டுகள் வந்துள்ளது. மேலும், வழக்கமான குடும்ப கதையாக இருந்தாலும் தனக்கான இடத்தை பதிய வைத்திருக்கிறார் இயக்குனர். இரண்டாம் பாதியில் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்ததால் இயக்குனராக கவின் வேலன் படத்தில் ஜெயித்து விட்டார் என்றே சொல்லலாம்.
நிறைகள் :
நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக நடித்திருக்கிறார்கள்.
சூரியின் நடிப்பு வேற லெவல்.
முதல் பாதியை விட இரண்டாம் பாதி விறுவிறுப்பாக சென்றது.
படம் மக்கள் மத்தியில் பாராட்டக் கூடிய வகையில் உள்ளது.
படத்திற்கு இசையும் ஒளிப்பதிவும் அற்புதமாக அமைந்துள்ளது.
குறைகள் :
முதல் பாதி போர் அடிக்கும் வகையில் சற்று சலிப்பு தட்டி உள்ளது.
வழக்கமான குடும்ப கதை படம் தான்.
சண்டை காட்சிகளில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்.
மொத்தத்தில் வேலன்– குடும்பத்துடன் சென்று பார்க்கும் அளவிற்கு வேலையை செய்திருக்கிறார்.