இயக்குனர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஆனந்தம் விளையாடும் வீடு. இந்த படத்தை ஸ்ரீவாரி பிலிம்ஸ் தயாரித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு சித்துகுமார் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் சேரன், கௌதம் கார்த்திக், சரவணன், டேனியல் பாலாஜி, வெண்பா, மொட்டை ராஜேந்திரன், சிங்கம்புலி, பிக்பாஸ் சினேகன் என பெரும் நடச்சத்திர பட்டாளமே நடித்து உள்ளனர். குடும்பப் பாச கதையாக உருவாகியுள்ள ஆனந்தம் விளையாடும் வீடு இன்று வெளியாகியுள்ளது. இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.
கதைக்களம்:
தமிழ் சினிமாவில் குடும்ப பாங்கான கதைகள் பல வந்து இருக்கிறது. அந்த வகையில் தற்போது அண்ணன் தம்பி பாச கதையாக உருவாகியிருக்கும் படம் தான் ஆனந்தம் விளையாடும் வீடு. ஒரு பெரிய குடும்பத்தின் பாசப் போராட்டத்தை உணர்வுபூர்வமாக இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கி இருக்கிறார். பொதுவாகவே குடும்ப கதைகள் என்றால் அண்ணன்- தங்கை, அம்மா-மகன் என கதைகள் உருவாகி இருக்கிறது. ஆனால், அண்ணன்- தம்பி பாச கதையை வைத்து உருவாகி இருக்கும் படம் குறைவு. அந்த வகையில் இந்த படத்தில் காட்டப்படும் பாசம், சண்டை, போராட்டம் என பல நிகழ்வுகளை காட்டுகிறார் இயக்குனர்.
திண்டுக்கல் பகுதியில் வசிக்கும் ஜோ மல்லூரிக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவிக்கு சரவணன், விக்னேஷ், சினேகன், என நான்கு மகன்கள். சரவணன் மகன் தான் கவுதம் கார்த்திக், மகள் வெண்பா. இரண்டாவது மனைவிக்கு சேரன், செல்லா, சவுந்தரராஜா ஆகியோர் மகன்கள். மேலும், ஒட்டுமொத்த குடும்பத்தையும் கட்டி காக்கும் அண்ணனாக சரவணன் திகழ்கிறார். சேரன் தனது அண்ணன் சரவணன் மீது அதிக பாசம் வைத்துள்ளார்.
வெண்பாவின் குழந்தைகள் தங்கள் வீட்டில் தான் பிறக்க வேண்டுமென சரவணன் நினைக்கிறார். அதற்காக தனது சொந்தமான வீட்டு மனையை சரவணனுக்கு சேரன் கொடுத்துவிட்டு செல்கிறார். பின் அண்ணன், தம்பிகள் என ஓட்டு மொத்த குடும்பமும் ஒன்றாக வசிக்கும் படி ஒரு பெரிய வீட்டை கட்ட ஆரம்பிக்கிறார் சரவணன். இதனால் அண்ணன், தம்பிகள் இடையே பிரச்சினை ஏற்படுகிறது. மேலும், அண்ணன்– தம்பி பகையை பெருசாகி பிரிக்க நினைக்கிறார் டேனியல் பாலாஜி. கடைசியில் அண்ணன் தம்பிகள் ஒன்றாக இருந்தார்களா? வீடு கட்டினார்களா? இணைந்தார்களா? என்பது தான் படத்தின் மீதி கதை.
இந்த படத்தில் பல கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும், படத்தில் பல கதாபாத்திரங்கள் இருந்தாலும் அவர்களுக்கு சரியான முக்கியதுவத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர். படத்தில் சேரனுடைய பாசப்போராட்ட காட்சிகள் எல்லாம் அருமையாக வந்திருக்கிறது. பாசமான அண்ணன்-தம்பி, குடும்பத்தை பிரிக்க துடிக்கும் தம்பிகள், தகராறு செய்யும் மனைவிகள் என்று எல்லா இடங்களிலும் இயக்குனர் அற்புதமாக இயக்கி இருக்கிறார். சரவணன் ஒட்டுமொத்த குடும்பத்தையும் தன்னுடைய ஒற்றைச் சொல்லால் பார்த்துக்கொள்கிறார்.
இப்படி ஒரு அண்ணன் நமக்கு கிடைக்க மாட்டாரா? என்று ஏங்க வைக்கும் அளவிற்கு நடித்திருக்கிறார் சரவணன். படத்தில் கௌதம் கார்த்திக் ஜோடியாக ஷிவாத்மிகா நடித்திருக்கிறார். வில்லனாக டேனியல் பாலாஜி மிரட்டியிருக்கிறார். படத்தில் சித்து குமார் இசை இன்னும் நன்றாக செய்திருக்கலாம் என்று சொல்லும் வகையில் உள்ளது. இந்த மாதிரியான குடும்ப படங்களில் உணர்வுபூர்வமாக இசை அமைந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அதாவது ஒரே ஒரு பாடலையாவது அழுத்தமாக உணர்ச்சியாக கொடுத்து இருந்திருக்கலாம்.
படத்தில் ஒளிப்பதிவு நம்மை கிராமத்துக்கு கொண்டு போய் சேர்ந்திருக்கிறது. மொத்தத்தில் இந்த படத்தை பார்க்கும் போது நம்மை பாண்டவர்பூமி, கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட சில படங்கள் தான் ஞாபகம் வருகிறது. அண்ணன்– தம்பிகள் சேர்ந்து ஒன்றாக வீடு கட்டும் போது அவர்களுக்கிடையே ஏற்படும் பிரச்சனையை அழகாக காண்பித்திருக்கிறார் இயக்குனர். பின் இதை மட்டும் மையமாக கொண்டு வேறு எந்த பிரச்சனையும் படத்தில் பெரிதாக இல்லாததால் விறுவிறுப்பான திருப்புமுனை எதுவும் இல்லை. இரண்டாம் பாதி அளவிற்கு முதல் பாதி விறுவிறுப்பாக செல்லவில்லை.
நிறைகள் :
படத்தில் அதிகப்படியான நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலமாக உள்ளது.
அண்ணன்-தம்பி பாசத்தை அழகாக சொல்லி இருக்கிறார் இயக்குனர்.
குறைகள் :
படத்தின் இசை இன்னும் அழுத்தமாக அமைந்திருக்கலாம்.
படத்தில் அதிக கதாபாத்திரங்கள் என்பதால் யார் என்ன என்பதை நினைவில்கொள்ள முடியாத அளவிற்கு இருக்கிறது.
அண்ணன் தம்பி சேர்ந்து வீடு கட்டுவது, அவர்களின் பிரச்சினையை மட்டும் தான் மையமாக வைத்து இருக்கிறார். இன்னும் கொஞ்சம் ஆழமாக கொண்டு சென்றிருந்தால் திருப்புமுனையாக அமைந்திருக்கும்.
மொத்தத்தில் ஆனந்தம் விளையாடும் வீடு– கொஞ்சமாய் விளையாடி சென்றுவிட்டது.