பொதுவாகவே தமிழ் சினிமாவில் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்திய படங்கள் பல வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் காமராசர், காந்தி, பெரியார் தந்தை போன்ற தேசிய தலைவர்கள் வாழ்க்கை வரலாற்று படங்கள் எல்லாம் வெளியாகி இருக்கிறது. அந்த வரிசையில் தற்போது கக்கன் வாழ்க்கை வரலாற்றை படம் வெளியாகி இருக்கிறது. எளிமைக்கும் நேர்மைக்கும் உதாரணமாக இருந்தவர் கக்கன். இவர் விடுதலை வீரர், இந்திய நாடாளுமன்ற உறுப்பினர், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர், தமிழக பொதுப்பணித்துறை என பல பொறுப்புகளை வகித்தவர்.
இந்த படத்தில் கக்கன் என்ற கதாபாத்திரத்தில் ஜோசப் பேபி நடித்து இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இவர் இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை எழுதியது மட்டும் இல்லாமல் தயாரித்தும் இருக்கிறார். பல எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி இருக்கும் கக்கன் படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.
கதைக்களம்:
படத்தின் ஆரம்பத்தில் நினைவிழந்த நிலையில் கக்கன் மருத்துவமனையில் இருக்கிறார். அதற்கு பிறகு அடுத்தடுத்து அவருடைய வாழ்வில் நடந்த நிகழ்வுகள் வரிசையாக வருகிறது. வழக்கமான வாழ்க்கை வரலாற்று படங்களில் இருக்கும் எதார்த்த கதை இந்த படத்தில் இல்லை என்றே சொல்லலாம். ஆரம்பத்திலிருந்து இறுதிவரை நாடகமாகவே இருக்கிறது. குறிப்பாக ஜோசப் பேபியின் நடிப்பு கக்கன் கதாபாத்திரத்திற்கு செட்டாகவில்லை என்று சொல்லலாம்.
வசன உச்சரிப்பு, உடல் மொழி எதுவும் ஒரு நடிகராக அவருக்கு கை கொடுக்கவில்லை. வசனங்கள் எல்லாம் மனப்பாடம் செய்து ஒப்பிப்பது போன்று இருக்கிறது. இவரை அடுத்து படத்தில் வரும் அய்யர் மற்றும் காமராசர், காந்தி போன்ற கதாபாத்திரத்தில் நடித்த நடிகர்களும் நடிக்க முயற்சித்து இருக்கிறார்கள். கக்கனுடைய வாழ்க்கை வரலாறு, அரசியல் நிகழ்வுகளையும், சமூக நிகழ்வுகளையும் கொண்டிருந்தது. சுதந்திரப் போராட்டத்தில் நிகழ்ந்த மனித அவலங்களையும் அவருடைய சொந்த வாழ்க்கையில் நடந்த உறவு சிக்கல்களையும் படத்தில் காட்ட இயக்குனர் முயற்சி செய்திருக்கிறார். ஆனால், அதை நேர்த்தியாக கொண்டு வரவில்லை.
குறும்படமாக கொடுத்திருந்தால் கூட படம் நன்றாக இருந்திருக்கும். அதுமட்டுமில்லாமல் கக்கன் வாழ்க்கையின் மிக முக்கிய நபர்களில் ஒருவர் வைத்தியநாத ஐயர். அவருடைய கதாபாத்திரம் பெரிதாக சொல்லப்படவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர், விவசாயத்துறை, பொதுப்பணித்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, உள்துறை அமைச்சர் என பல பதவிகளில் கக்கன் இருந்திருக்கிறார். ஆனால், இந்த படத்தில் அவர் என்ன பதவி வகித்தார் என்று ஒரு இடத்தில் கூட கூறவில்லை.
மேலும், கக்கன் இரண்டு புதிய நீர்நிலைகளை உருவாக்கியிருந்தது, ஆதிதிராவிட மாணவர்களுக்கு பள்ளி திறந்தது, காவல் துறையினருக்கு தனியாக பயிற்சி பள்ளி தொடங்கியது போன்ற பல சம்பவங்களை இந்த படத்தில் காண்பிக்கவில்லை. மொத்தத்தில் கக்கனுடைய வாழ்க்கை வரலாற்றில் பாதி நிகழ்வுகள் சொல்லவில்லை. மேலும் இந்த படத்திற்கு தேவாவின் பின்னணி இசை தான் பலமாக இருந்திருக்கிறது. ஒளிப்பதிவும் ஓகே. ஆனால், தொழில்நுட்பத்தை கையாண்ட விதம் தான் கடுப்பை ஏற்றி இருக்கிறது.
பட்ஜெட் குறைவாக இருந்தாலும் கதைக்களத்தை கொண்டு சென்ற விதத்தில் நேர்த்தியாக இருந்திருந்தால் படம் நன்றாக இருந்திருக்கும். மக்களுக்காக எளிமையாக வாழ்ந்த ஒரு அரசியல் ஆளுமையின் வாழ்க்கை வரலாற்றை மக்களிடம் கொண்டு செல்ல முயற்சித்ததற்கு இயக்குனருக்கு பாராட்டு தவிர மற்றபடி படத்தில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு ஒன்றுமே இல்லை. மக்களுக்காக உழைத்த சுதந்திர வீரர் கக்கன் அவர்களுக்காக வேண்டுமென்றால் படத்தை போய் பார்க்கலாம்.
நிறை:
பின்னணி இசை, ஒளிப்பதிவு ஓகே. கக்கனுடைய கக்கன் வாழ்க்கை வரலாறு. மற்றபடி படத்தில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பெரிதாக எதுவும் இல்லை.
குறை:
இயக்குனர் கதையை கொண்டு சென்ற விதத்தில் கவனம் செலுத்தி இருக்கலாம். வசனங்கள் உச்சரிப்பு எதுவும் சரியாக இல்லை. நடிகர்கள் இன்னும் கொஞ்சம் நடிப்பில் கவனம் செலுத்தி இருக்கலாம். ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை பார்வையாளர்கள் மத்தியில் கடுப்பை ஏற்றி இருக்கிறது. கக்கனுடைய பல சம்பவங்களை படத்தில் காண்பிக்கவில்லை. மொத்தத்தில் கக்கன்-முயற்சி கை கொடுக்கவில்லை