மாரிமுத்து இறப்பு குறித்து நடிகர் வடிவேலு அளித்து இருக்கும் பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில தினங்களாக சோசியல் மீடியா முழுவதும் மாரிமுத்துவின் இறப்பு குறித்த செய்தி தான் வைரலாகி வருகிறது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர் நீச்சல் தொடரில் குணசேகரன் என்ற கதாபாத்திரத்தின் மூலம் அனைவரின் மனதையும் கவர்ந்தவர் மாரிமுத்து. இந்தம்மா ஏய் என்ற டிரேட் மார்க்கிற்குச் சொந்தக்காரர் மாரிமுத்து.
இவர் தேனி மாவட்டம் பசுமலை பகுதியை சேர்ந்தவர். இவர் சீரியலில் நடிப்பதற்கு முன் பாடலாசிரியர் வைரமுத்து விடம் உதவியாளராக பணியாற்றி இருந்தார். அது மட்டும் இல்லாமல் இவர் இயக்குனர்கள் ராஜ்கிரண், வசந்த், எஸ்.ஜே சூர்யா போன்ற பல இயக்குனர்களிடமும் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். தமிழில் இவர் “கண்ணும் கண்ணும்” என்ற படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
மாரிமுத்து திரைப்பயணம்:
ஆனால், அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. அதற்குப் பிறகு இவர் குணச்சித்திர நடிகராக பல படங்களில் நடித்து இருக்கிறார். சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியிருந்த ஜெயிலர் படத்தில் மாரிமுத்து நடித்திருந்தார். இதனை அடுத்து கமலஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் மாரிமுத்து நடித்திருக்கிறார். இதனை அடுத்து இவர் நடிப்பில் பல படங்கள் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது.
மாரிமுத்து மரணம்:
இப்படி தொடர்ந்து இவர் பல படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் நேற்று முன் தினம் காலை மாரடைப்பு காரணமாக மாரிமுத்து திடீர் மரணமடைந்தார். டப்பிங் பேசிக்கொண்டு இருக்கும் போது அவருக்கு நெஞ்சு வலி வந்து இருக்கிறது. உடனே அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளித்தும் இறந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. நேற்று அவரது உடல் அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் பசுமலை கிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
வடிவேலு அளித்த பேட்டி:
இவரின் இழப்பு பலருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இவருடைய மறைவிற்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் என பலருமே இரங்கலை தெரிவித்து இருக்கிறார்கள். இந்த நிலையில் மதுரை விமான நிலையத்தில் நடிகர் வடிவேலுவை செய்தியாளர்கள் சந்தித்து பேட்டி எடுத்திருக்கிறார்கள். அப்போது அவர்கள் மாரிமுத்து இறந்த செய்தி குறித்து கேட்டதற்கு வடிவேலு சொன்னது, நடிகர் மாரிமுத்து இறந்த செய்தி கேட்டதுமே ரொம்ப கஷ்டமாகிவிட்டது.
மாரிமுத்து குறித்து சொன்னது:
ராஜ்கிரன் அலுவலகத்தில் இருந்தபோதில் இருந்தே நானும் அவரும் நெருக்கமாக பழகினோம். அவருடைய கண்ணும் கண்ணும் படத்தில் நான் நகைச்சுவை காட்சியில் நடித்து இருக்கேன். அதிலும் அடித்து கேட்டாலும் சொல்லாதீர்கள் என்ற வசனம் வரும். அது மாரிமுத்து உடையது தான். கிணற்றை காணும் நகைச்சுவையும் அவர் தான் உருவாக்கி தந்தார். மிகப்பெரிய சிந்தனையாளர். மனம் விட்டு சிரிப்பார். இவர் மறைந்தது திரையுலகுக்கு பெரிய அதிர்ச்சி இழப்பு என்று கூறியிருக்கிறார்.