எதிர்நீச்சல் மாரிமுத்துக்கு எதிராக ஜோதிட சங்கம் அனுப்பி இருக்கும் நோட்டீஸ் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் எதிர்நீச்சல் சீரியல் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று இருக்கிறது. இந்த சீரியலில் ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக அசத்தி வருபவர் நடிகர் மாரிமுத்து. சீரியலில் இவர் மதுரை ஸ்லாங்கில் பேசி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இருக்கிறார்.
மேலும், இந்த சீரியலின் வெற்றிக்கு மாரிமுத்துவும் ஒரு காரணம் என்று சொல்லலாம். இந்தம்மா ஏய் என்ற டிரேட் மார்க்கிற்குச் சொந்தக்காரர் மாரிமுத்து. இவர் சீரியலில் நடிப்பதற்கு முன் பாடலாசிரியர் வைரமுத்து விடம் உதவியாளராக பணியாற்றி இருந்தார். அது மட்டும் இல்லாமல் இவர் இயக்குனர்கள் ராஜ்கிரண், வசந்த், எஸ்.ஜே சூர்யா போன்ற பல இயக்குனர்களிடமும் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். அதன் பின் இவர் “கண்ணும் கண்ணும்” என்ற படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால், அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை.
மாரிமுத்து திரைப்பயணம்:
அதற்குப் பிறகு இவர் குணச்சித்திர நடிகராக பல படங்களின் நடித்து இருக்கிறார். தற்போது மாரிமுத்து ஜெயிலர், இந்தியன் 2 போன்ற பல படங்களில் நடித்து வருகிறார். இருந்தாலும், சன் டிவி எதிர்நீச்சல் சீரியல் தான் இவருக்கு நல்ல ரீச்சை கொடுத்து இருக்கிறது. இப்படி இவர் பிசியாக நடித்து கொண்டு வந்தாலும் நிகழ்ச்சியிலும் பங்கேற்று வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் தமிழா தமிழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இருக்கிறார்.
ஜோதிடர்கள் vs மக்கள்:
மேலும், இந்த நிகழ்ச்சியில் ஜோதிடர்கள் vs மக்கள் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்று இருக்கிறது. நிகழ்ச்சியில் சந்திராஷ்டமம் அன்று செல்பி எடுத்து டெலிட் செய்து விட்டால் அந்த நல்ல நாளாக இருக்கும் என்று ஜோதிடர்கள் சொன்னார்கள். இதை கேட்டவுடன் மாரிமுத்துக்கு கோபம் வந்தது. ஆனால், அவர் எதுவுமே பேசாமல் அமைதியாக இருந்தார். பின் மாறி மாறி ஜோதிடர்கள் பேசிக் கொண்டிருந்ததை ஆத்திரம் தாங்க முடியாத மாரிமுத்து கொரோனா வரும்போதும், சென்னையில் வெள்ளம் வரும்போதும் எந்த ஜோதிடமும் எதுவுமே சொல்லவில்லை.
ஜோதிடர்கள் குறித்து மாரிமுத்து சொன்னது:
அதோடு ஸ்டாலின் முதல்வராகவே வாய்ப்பு இல்லை என்று சொன்னார்கள். ஆனால், இன்று அவர் முதல்வராகிவிட்டார். இதையெல்லாம் ஏன் நீங்கள் சொல்லவில்லை? அதை விட்டு தேவையில்லாததெல்லாம் சொல்கிறீர்கள் என்று கேட்டிருக்கிறார். இதை அடுத்து ஜோதிடர்களுக்கும், மாரிமுத்துவுக்கும் இடையே வாக்குவாதம் கிளம்பி இருக்கிறது. மேலும், இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் சேத்தூர் கிராமத்தில் வசித்து வரும் பாரம்பரிய வள்ளுவர் குல ஜோதிட சங்கம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பழ. ஆறுமுகம் என்பவர் மாரிமுத்துவிற்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்.
மாரிமுத்து மீது வக்கீல் நோட்டீஸ்:
அதில் அவர், தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் மாரிமுத்து ஜோதிடம் குறித்து தவறாக பேசியிருக்கிறார். ஜோதிடம் என்பது இந்து மக்களினுடைய நம்பிக்கையில் ஒன்று. இவர் ஜோதிடத்தை பற்றி பொய்யான குற்றச்சாட்டுகளை வைத்ததால் பலருடைய மணம் புண்பட்டு இருக்கிறது. ஜோதிடர்கள் மற்றும் ஜோதிடத்தின் மேல் வைத்துள்ள நம்பிக்கை எல்லாம் கெட்டுப்போன அளவிற்கு அவர் பேசியிருக்கிறார். கருத்துரிமை என்ற பெயரில் சபை நாகரிகம் மீறி ஜோதிடர்களை ஒருமையில் பேசி இருக்கிறார். இவருடைய பேச்சால் பல்லாயிரக்கணக்கான வள்ளுவ குல மக்களின் வாழ்வாதாரமும் பொருளாதாரமும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. அவர் பேசியதற்கு தகுந்த விளக்கத்தை அவர் கொடுக்க வேண்டும். அப்படி அவர் விளக்கம் அளிக்கவில்லை என்றால் அவர் மீது வழக்கு தொடர்வோம் என்று கூறியிருக்கிறார்.